வியாபாரத்தில் வெற்றி பெற்ற பள்ளி மாணவி

கஷ்டம் என்னை பக்குவப்படுத்தியது!’ பள்ளிப் படிப்பை முடிக்கும் முன்பே தொழில் முனைவோர் ஆன ஜோதி: நான் ஐந்தாவது படிக்கும் போதே ஐ.ஏ.எஸ்., ஆக வேண்டும் என்று ஆசை இருந்தது. பத்தாவது படிக்கும் போதே, விபத்தில் அப்பா இறந்துவிட, நான் என் அம்மா, அக்கா, மூவரும் நிலைகுலைந்து போனோம். கண்ணீருடன் பொதுத் தேர்வு எழுதினேன். அதில் 91 சதவீத மார்க் எடுத்தேன்.

இதற்கிடையில், என் அம்மாவும் பன்றிக் காய்ச்சலால் இறந்து விட, நொறுங்கிப் போய்விட்டோம். என் மாமா, அவருடன் எங்களை அழைத்து சென்று விட்டார்.அப்ப, நான் பிளஸ் 1 சேர்ந்திருந்த நேரம், அக்கா, பி.டெக்., முதல் வருடம். இனி என்ன செய்யப் போகிறோம் என்ற பயம் ஏற்பட்டது. அப்போது தான் என் பெற்றோர் நடத்திய டில்லி டெய்லர் கடையை திறக்க முடிவெடுத்தேன்.என் அம்மா அடிக்கடி என்னை கடைக்கு அழைத்துச் சென்று தொழில் கற்றுக் கொடுத்ததால், அதில் ஓரளவிற்கு அனுபவம் உண்டு. அப்போது, பிளஸ் 1 படித்துக் கொண்டிருந்தாலும், படிப்பு தொழில் என்று பரபரப்பாக இருந்தேன்.

இப்ப என் கடைக்கு, மக்களிடம் நல்ல வரவேற்பு உண்டு. நான் பொறுப்பேற்ற போது, நான்கு மெஷின்கள் இருந்த இடத்தில் இப்போது, ஒன்பது மெஷின்கள் உள்ளன. பள்ளிப்படிப்பை முடித்து விட்டு தற்போது, பி.ஏ., சோஷியாலஜி படிக்கிறேன். என் அக்காவை பி.டெக்., படிக்க வைத்தேன். அவர் திருமணத்திற்கு தேவையான நகைகளையெல்லாம் சேர்த்து விட்டேன். நான் இவ்வளவு தூரம் நிமிர்ந்து வந்திருக்கிறதுக்கு என் அக்காவின் உறுதுணையும் காரணம்.கூடவே, என் ஐ.ஏ.எஸ்., கனவிற்கான வேலையும் நடக்கிறது. நாங்கள் பட்ட கஷ்டம் என்னை பக்குவப்படுத்தியுள்ளது. எந்த சூழலையும், நம்பிக்கையுடன் எதிர்கொள்ள தைரியத்தை கொடுத்தது. கஷ்டத்தில் இருந்து மீண்டே ஆக வேண்டும் என்று உறுதியுடன் போராடினால், நிச்சயம் நாளை நம்மை எல்லாரும் நிமிர்ந்து பார்ப்பாங்க!

http://www.dinamalar.com/splpart_detail.asp?id=93

Leave a comment