வயது 90 ஆனால் என்ன? 4ம் வகுப்பு தேர்வு எழுதி அசத்திய மூதாட்டி

படிக்க வசதியிருந்தும், நல்ல உடல் ஆரோக்கியம் இருந்தும் கல்வி கற்காமல் இருக்கும் பல பேருக்கு இடையே வயது 90ஐ எட்டியும், உடல் தளர்ந்தும் கூட, மனம் தளராமல் நான்காம் வகுப்பு தேர்வு எழுதிய மூதாட்டியை பலரும் பாராட்டி வருகின்றனர். கேரளாவில் ஒரு மூதாட்டி நான்காம் வகுப்பு தேர்வு எழுதி பலரது பாராட்டை பெற்று அசத்தி உள்ளார்.

கேரளாவில் தற்போது கல்வி கற்க வயது தடையாக இல்லை என்பதும், எவ்வளவு வயது முதிர்ந்திருந்தாலும் அவர்கள் நான்காவது, ஏழாவது, 10ம் வகுப்பு தேர்வு எழுத முடியும் என்ற நிலை உள்ளது மட்டுமல்ல, குறைந்தபட்சம் நான்காம் வகுப்பு தேறியிருந்தால் மட்டுமே பல்வேறு அரசு சலுகைகளை பெற முடியும் என்ற நிபந்தனை உள்ளதால், பல வயது முதிர்ந்த பெரியவர்களும் கல்வி கற்பதில் ஆர்வம் காட்டி வருகின்றனர். கேரள மாநிலம் ஆலப்புழாவைச் சேர்ந்தவர் பாத்திமா பீவி (90). இவர் சிறுவயதில் குடும்ப சூழ்நிலை காரணமாக பள்ளிக்கூடம் சென்று கல்வி கற்க முடியாத நிலை ஏற்பட்டது. ஆனால், தற்போது வயது அதிகரித்தும், உடல் தளர்ந்து விட்ட நிலையிலும் கல்வி கற்க வேண்டும் என்ற ஆர்வம் ஏற்பட்டது. குறைந்தது 10ம் வகுப்பாவது தேர்ச்சி பெற வேண்டும் என விரும்பினார். இதை அடுத்து அவர் தேர்வெழுத விண்ணப்பித்தார். தொடர்ந்து அவர் நேற்று முன்தினம் காலை ஆலப்புழா வாடக்கனால் சலாமத்துல் திக்வான் மதரெசா பள்ளி வளாகத்தில் அமைக்கப்பட்ட தேர்வு அரங்கில் தேர்வெழுதினார். கண் பார்வை மங்கியிருந்ததால், வினாத்தாளை படித்து பார்க்க இயலாமல் அவதிப்பட்டார். கண்களை குறுக்கியும், உற்று நோக்கியும் கூட பல வாக்கியங்கள் அவருக்கு தென்படவில்லை. அதை கவனித்து விட்ட அறை கண்காணிப்பாளர் விரைந்து சென்று அவருக்கு வினாக்களை படித்துக் காண்பித்து தேர்வெழுத உதவினார்.

தேர்வெழுதி விட்டு வெளியே வந்த அவர், மிகவும் சிறப்பாக தேர்வெழுதி இருப்பதாகவும், இதில் தேர்ச்சி பெற்ற பின் ஏழாம் வகுப்பு தேர்வெழுத விருப்பதாகவும், 10ம் வகுப்பில் தேர்ச்சி பெறவேண்டும் என்பதே தனது விருப்பம் என்றும் தெரிவித்தார். தேர்வெழுத அவர் தனது மகனுடன் தேர்வரங்கிற்கு வந்திருந்தார். அத்தேர்வை மாவட்டத்தில் அமைக்கப்பட்ட 142 மையங்களில், ஆயிரத்திற்கும் மேற்பட்ட தனித்தேர்வர்கள் ஆர்வத்துடன் தேர்வெழுதினர். அவர்களில் பலரும் 70, 80 வயதை கடந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

http://www.dinamalar.com/News_Detail.asp?Id=233393

இடது கையை இழந்த ஜூடோ வெற்றி வீரன் நிகிடோ!

ஜப்பானில், டொக்கியோவில் வசித்து வந்து பத்து வயது சிறுவன் நிகிடோ, கார் விபத்து ஒன்றில் தனது இடது கையை இழந்தவன். ஆனால் அவனுக்கு ஜூடோவில் மிகுந்த ஆர்வம் இருந்ததால், ஒரு மாஸ்டரை அணுகி ஜூடோ கற்றுக் கொள்வதற்கான தனது விருப்பத்தைத் தெரிவித்தான். அவரும், அவனைத் தனது சீடனாக ஏற்றுக் கொண்டு, ஜூடோ கற்றுக் கொடுக்கத் தொடங்கினார். ஆனால், மூன்று மாதங்களாகியும் அவர் ஜூடோவில் ஒரே ஒரு அசைவை மட்டுமே அவனுக்க கற்அக் கொடுத்திருந்தார்.

ஒரு நாள் நிகிடோ, தைரியத்தை வரவழைத்துக் கொண்டு அவரிடம் மெதுவாக “மாஸ்டர், இந்த அசைவைத் தவிர நீங்கள் வேறு அசைவுகளை ஏன் எனக்குக் கற்று தரவில்லை.’ “நீ இந்த ஒரு அசைவை மட்டும் தினமும் பயிற்சி செய்து வா, போதும். வேறு எதுவும் கற்றுக் கொள்ள வேண்டிய அவசியமில்லை’ என்று ஆசிரியர் பதிலளித்தார்.

ஒன்றும் புரியாத சிறுவன் நிகிடோ, ஆசிரியரிடம் நம்பிக்கை வைத்து, அந்த ஒரு அசைவை மட்டுமே தினமும் தீவிரமாக பயிற்சி செய்து வந்தான். கிட்டத்தட்ட ஒரு ஆண்டுக்கு பின், மாஸ்டர் அவனது முதல் பந்தயத் தொடருக்கு நிகிடோவை அழைத்துச் சென்றார். வியப்பூட்டும் விதமாக, முதல் இரண்டு போட்டிகளிலும் நிகிடோ மிக எளிதாக வெற்றி பெற்றான். மூன்றாவது போட்டி சற்றே கடினமாக இருந்தது. சிறிது நேரத்திற்கு பிறகு நிகோடோவின் ஒரே மாதிரியான ஜூடோ அசைவால் பொறுமையிழந்த எதிர்தரப்பு வீரர், அவனை ஆக்ரோஷமாகத் தாக்கத் தொடங்கினார். ஆனால் நிகிடோவோ, தனக்குத் தெரிந்த அந்த ஒரே ஒரு அசைவை மட்டுமே உபயோகித்து அவரை எளிதாகத் தோற்கடித்தான். தனது வெற்றியை நம்ப இயலாத நிகிடோ, இறுதிப் போட்டிக்குத் தயரானான்.

இம்முறை அவருடன் ஜூடோ சண்டை போட இருந்தவர், உருவத்தில் பெரிவராகவும், வலிமையானவராகவும், அதிக அனுபவமுள்ளவராகவும் தோன்றினார். சிறிது நேர சண்டைக்குப் பின், நிகிடோ சோர்வுற்றதை கவனித்த நடுவர், அவனுக்கு அடிபட்டு விடப் போகிறதே என்ற கவலையில், சிறிது நேரம் ஆட்டத்தை நிறுத்த முடிவு செய்தார்.

“வேண்டாம், அவன் தொடர்ந்த சண்டை போடட்டும்; ஒன்றும் ஆகாது’ என்று நிகிடோவின் மாஸ்டர் உறுதியாகக் கூறினார். போட்டி மீண்டும் துவங்கியபோதுதான் அந்தச் சம்பவம் நிகழ்ந்தது. நிகிடோவுக்கு எதிராக விளையாடியவர், கையில்லாத சிறுவன்தானே, என்ன பெரிதாக செய்து விடப் போகிறான் என்று சற்றே அலட்சியமாகிவிட, நிகிடோ அத்தருணத்தை தனக்கு சாதகமாக்கிக் கொண்டு, தனக்குத் தெரிந்த அந்த ஒரே அசைவால் அவரைத் தாக்கி நிலைகுலையச் செய்தான். பிறகென்ன, நிகிடோ அப்போட்டியை மட்டுமல்லாமல், அத்தொடரையே கைப்பற்றி, வெற்றிவீரனானான்.

வீடு திரும்பும் வழியில், இறுதிப் போட்டி வரை அவனுக்கு எதிராக விளையாடியவர்களின் பல்வேறு அசைவுகளைப் பற்றி நிகிடோவின் மாஸ்டர், அவனுக்கு விளக்கிக் கொண்டே வந்தார். மீண்டும் தைரியத்தை வரவழைத்துக் கொண்ட நிகிடோ, அவரிடம் கேட்டான்: “மாஸ்டர் ஒரே ஓர் அசைவை மட்டுமே வைத்துக் கொண்டு என்னால் எதிராளியை எப்படி எளிதில் வீழ்த்த முடிந்தது?’

“உனது வெற்றிக்கு இரண்டு காரணங்கள் உள்ளன. ஒன்று, ஜூடோவின் மிகக் கடினமான அசைவை மீண்டும் மீண்டும் பயிற்சி செய்து, நீ அதில் மிகவும் தேர்ந்து விட்டாய். இரண்டாவதாக உனது அசைவை எதிர்கொள்ள, உனது கையைப் பிடித்துத் தடுப்பதுதானா ஜூடோவிலே உள்ள ஒரே ஒரு பாதுகாப்பு இயக்கம். உனக்கு இடது கை இல்லாததால், எதிராளிகளுக்கு அதை செய்ய முடியாமல் போனது. எனவே உனது பலவீனத்தால் தான் உன்னால் எளிதாக வெற்றி பெற முடிந்தது’ அதாவது நிகிடோவின் மிகப்பெரும் பலவீனம் அவனுக்கு மிகப்பெரும் பலமாக மாறி, அவனை வெற்றி பெறச் செய்தது.

சில நேரங்களில் நம்மிடம் சில பலவீனங்கள் உள்ளதாக நினைத்துக் கொண்டு, சூழ்நிலைகளையும், பிறரையும், அதிஷ்டத்தையும், ஏன், நம்மையுமே கூட குறை கூறிக் கொள்கிறோம்; ஆனால் ஒரு நாள் நமது பலவீனமே நமக்கு பலமாக மாறக்கூடும் என்பதை நாம் அறிந்திருப்பதில்லை.

நாம் ஒவ்வொருவருமே விசேஷமானவர்கள் மற்றும் முக்கியமானவர்கள்தான். எனவே, நமக்கு பலவீனங்கள் இருப்பதாக நினைக்காமல், நம்மை நாமே தாழ்வானவர்களாகவோ, உயர்ந்தவர்களாகவோ நினைத்தக் கொள்ளாமல், நமக்கு இறைவன் தந்த வாழ்க்கை என்ற வரத்தை முழுவதுமாக உபயோகித்து, அதில் நம்மால் முடிந்த அளவு வெற்றி பெற முயற்சிப்போமாக!

-ஆர். ஸ்ரீமதி நவிச்சந்தர், தில்லி

http://www.dinamalar.com/Supplementary_detail.asp?id=4745&ncat=16