112 வயதிலும் ஓய்வறியாமல் உழைக்கும் “இளைஞர்’

யார் தயவுமின்றி, ஓய்வறியாமல் 112 வயது “இளைஞர்’ ஒருவர் உழைத்து வருவது சிதம்பரத்தில் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

கடலூர் மாவட்டம், சிதம்பரம் மணலூர் கெங்கையம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் மாணிக்கம் (112). இவருக்கு மூன்று மகள்கள். அனைவருக்கும் திருமணம் செய்து கொடுத்து விட்டு, மனைவியுடன் வசித்து வந்தார். எட்டு ஆண்டுகளுக்கு முன் மனைவி இறந்து விட்டார். ஆனால், தனது மகள்கள் வீட்டில் தங்காமல் தள்ளாத வயதிலும், யார் தயவும் இன்றி தனியாக வசித்து வருகிறார்.

அதுமட்டுமின்றி அடுத்த வேளை சாப்பாட்டிற்கு அடுத்தவர்களை எதிர்பார்க்காமல் ஆடுகள் மேய்த்தும், தனக்கு தெரிந்த கயிறு திரிக்கும் தொழிலைக் கொண்டு அதில் கிடைக்கும் வருமானத்தில் காலத்தை ஓட்டி வருகிறார். ஆடு மேய்த்த நேரம் போக, கிழிந்த நைலான் சாக்குகளைக் கொண்டு கயிறு செய்து விற்பனை செய்து அப்பகுதி மக்களின் கவனத்தை வெகுவாக கவர்ந்துள்ளார்.

என்னால் முடியாதது ஒன்றும் இல்லை என வெறுமனே வாயால் கயிறு திரித்து உழைக்க விரும்பாமல், அடுத்தவர்களை நம்பியே காலத்தை ஓட்டும் இந்தக்கால இளைஞர்கள் மத்தியில், தள்ளாத வயதிலும், யாருடைய தயவையும் எதிர்பாராமல் உழைத்து சாப்பிடும் முதியவரை, இல்லை, இல்லை இந்த 112 வயது”இளைஞரை’ நினைத்தால் பெருமைப்படாமல் இருக்க முடியாது.

http://www.dinamalar.com/News_Detail.asp?Id=143437

53 வயதிலும் எஸ்.எஸ்.எல்.சி., தேர்வு எழுதும் பெண்

பேரக்குழந்தைகளுடன் கொஞ்சி விளையாடும் வயதில் தன்னம்பிக்கையுடன் 53வது வயதில், பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதுகிறார் கேரளாவைச் சேர்ந்த பெண் ஒருவர்.கேரளா மாநிலம், கொழிஞ்சாம்பாறையை சேர்ந்தவர் செண்பகாதேவி(53); இவர், தமிழ் வழியில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வை, பொள்ளாச்சி நகராட்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் எழுதி வருகிறார்.செண்பகாதேவி கூறியதாவது:

பொள்ளாச்சியில் ஒன்பதாம் வகுப்பு வரை படித்தேன். அதன்பின், வீட்டில் படிக்க அனுமதிக்கவில்லை. எனது 17ம் வயதில் திருமணம் நடந்தது. கணவரின் சொந்த ஊர் கொழிஞ்சாம்பாறை என்பதால் அங்கு சென்று விட்டேன். அதன்பின், படிக்கும் வாய்ப்புகள் கிடைக்கவில்லை. இந்தியும், மலையாளமும் டியூஷன் மூலம் கற்றேன்.

எனது கணவர் ஜெகதீசன், 10ம் வகுப்பு வரை படித்துவிட்டு விவசாயம் செய்கிறார். மகள் பி.எட்., படித்து தனியார் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றுகிறார். மகன் எம்.பி.ஏ., படித்து, சொந்தமாக வியாபாரம் செய்கிறார்.எனக்கு படிக்க வேண்டும் ஆசை இருந்தது; குடும்பத்தார், என்னை ஊக்கப்படுத்தினர். மூன்றாண்டுகளாக பத்தாம் வகுப்புக்கு தேவையான புத்தகங்களை வாங்கி படித்தேன்.

கணக்கு, அறிவியல் உள்ளிட்ட பாடங்களுக்காக, கேரளாவிலுள்ள தனியார் ‘டியூஷன் சென்டரில்’ வகுப்புகளுக்கு சென்றேன்.தினமும் மூன்று மணி நேரம் படிப்பதற்காக ஒதுக்குகிறேன். பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்று, பட்டப்படிப்பும், கம்ப்யூட்டர் சார்ந்த படிப்பும் படிக்க வேண்டும் என்ற ஆர்வமுள்ளது, என்றார்.

http://www.dinamalar.com/General_detail.asp?news_id=23301

நம்பிக்”கை’! யுடன் சாதனை படைக்கும் பெண்

பிறவியிலேயே இரண்டு கைகளும் இல்லாமல் நம்பிக்கையை மட்டுமே வைத்துக்கொண்டு அனைத்து வேலைகளையும் கால்களாலேயே செய்து காண்போரை பிரமிக்க வைக்கிறார் ஓர் இளம் பெண்.

சிலர் எல்லா உறுப்புகளும் நன்றாக இருந்தும் பிச்சை எடுத்தும் ஏமாற்றி பிழைத்து வாழ்கின்ற இந்த கால கட்டத்தில் பிறவியிலேயே இரு கைகளையும் இழந்த இப்பெண் தன்னம்பிக்கை ஒன்றையே கையாக கொண்டு அனைத்து வேலைகளையும் தானே செய்து எவர் உதவியும் இன்றி வெற்றி நடைபோடும் காட்சி நம்மை வியப்பில் ஆழ்த்துகிறது.

உடல் உறுப்பு குறைபாடு இருப்பினும் உள்ளம் உறுதியுடன் செயலாற்றினால் இந்த உலகை அளக்கலாம் என்று தன்னம்பிக்கை ஊட்டுவார்கள் அறிஞர்கள். அந்த வகையில் இந்தப் பெண் ஒவ்வொரு நாளும் தனது அன்றாட பணிகளையும் தாமே செய்வதோடு மட்டுமல்லாமல் வீட்டின் வறுமையைப் போக்கவும் வாழ்வின் ஜீவாதாரத்தைப் பெருக்கவும் ஒரு சிறு இட்லி கடையை வைத்து நடத்தி வருகிறார்.

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அடுத்துள்ள ஆர்.கே.பேட்டை ஒன்றியத்துக்கு உட்பட்டது குருவப்பநாயுடு கண்டிகை கிராமம். இக்கிராமத்தை சேர்ந்த மணிவேல், எலன் தம்பதியருக்கு 5 பிள்ளைகள். இதில் மூத்த மகளான பரமேஸ்வரிக்குப் பிறவியிலிருந்தே இரு கைகளும் இல்லை. ஆனால் மனம் தளராத இவர் தனது கால்களாலேயே எழுதப் படிக்க கற்றுக்கொண்டு 5 -ம் வகுப்பு வரை படித்து உள்ளார்.இவர் இப்பகுதி மகளிர் குழுத் தலைவியாகவும் செயல்பட்டு வருகிறார்.

இவர் இரண்டு கைகள் இல்லாத நிலையிலும் தனது தந்தை வைத்துள்ள இட்லி கடையில் தந்தைக்கு உதவியாக அனைத்து வேலைகளையும் காலிலேயே செய்து வருவதோடு கடைக்கு வருபவர்களையும் வியப்பில் ஆழ்த்துகிறார். இது மட்டுமில்லாமல் வீட்டு வேலைகளான கோலம் போடும்வது, உணவு சமைப்பது, துணி துவைப்பது, தலையை வாருவது, கைப்பேசியை பயன்படுத்தி பிறரிடம் பேசுவது, வீட்டை சுத்தப்படுத்துவது உள்ளிட்ட பல வேலைகளையும் இவர் தனது கால்களாலேயே செய்து பார்ப்போரை பிரமிக்க வைக்கிறார்.

மாற்றுத்திறனாளிகள் தங்களுக்கு உள்ள உடல் குறைபாடுகளை எண்ணி வேதனைப்படும் இக்காலத்தில் தனக்கு இரண்டு கைகள் இல்லை என்ற நிலையிலும் தனது வேலைகளை தானே செய்துகொண்டு யாருக்கும் சுமையாக இல்லாமல் இருக்க வேண்டும் என்றும் தனது வேலைகளை தானே செய்து கொள்கிறார் இவர். கை, கால்கள் இருப்பவர்களே தன்னுடைய வேலைகளை செய்ய கஷ்டப்படும் இக்காலத்தில் பரமேஸ்வரியைப் போன்றோர் நம்பிக்கையை மட்டுமே வைத்துக்கொண்டு வாழ்ந்து வருகின்றனர்.

இதுகுறித்து பரமேஸ்வரி கூறும்போது, “”நான் பிறந்தபோது இரு கைகளும் இல்லாமல் பிறந்தேன். சிறு வயதில் இப்படி பிறந்துவிட்டோமோ என எண்ணி வருத்தப்பட்ட காலங்கள் உண்டு. நாளடைவில் அந்த குறையை நான் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. சிறு வயதிலிருந்தே சிறு வேலைகளை எனது கால்களாலே செய்ய தொடங்கினேன். பிறகு அனைத்து வேலைகளையும் செய்யப் பழகிக்கொண்டேன். தற்போது திருத்தணி ஒன்றியம் கே.ஜி.கண்டிகையில் எனது தந்தை வைத்திருக்கும் இட்லி கடைக்கு சென்று அவருக்கு உதவியாக அனைத்து வேலைகளையும் செய்து வருகிறேன்.

மேலும் வீட்டில் இருக்கும்போது எனது வேலைகளை நான் யாரிடமும் செய்ய கேட்பதில்லை. எந்த வேலையாக இருந்தாலும் நம்மால் செய்ய முடியம் என நம்பிக்கை வைத்துக்கொண்டு எனது வேலைகளை நானே செய்துகொள்கிறேன். மாற்றுத்திறனாளியாக பிறந்துவிட்டோமோ என எண்ணி யாரும் வருத்தப்படக்கூடாது. மேலும் யாரும் வருத்தப்படுவது, தற்கொலை செய்துகொள்வது போன்ற செயல்கள் செய்ய கூடாது. வருத்தப்படாமல் முயற்சி செய்து மகிழ்ச்சியாக இந்த உலகில் வாழ கற்றுக்கொள்ள வேண்டும். இந்த உலகம் நம் எல்லோருக்குமானதுதான்.

http://www.dinamani.com/edition/Story.aspx?SectionName=Sunday%20Kondattam&artid=342151&SectionID=144&MainSectionID=144&SEO=&Title=%E0%AE%A8%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%22%E0%AE%95%E0%AF%88

கபடி விளையாட்டில் கவிதாவின் சாதனை கதை

என் சொந்த ஊர் சென்னை. எங்க வீட்டில் ஐந்து பெண்கள். நான் தான் கடைசி பெண். ஆவடியில் உள்ள இமாகுலேட் பெண்கள் மேல் நிலைப் பள்ளியில் படித்தேன். என் அனைத்து வெற்றிகளுக்கும் அடிப்படை, என் பள்ளி தான். “கபடி விளையாட்டில் நீ கண்டிப்பா உயரம் தொடுவாய்’ என்று ஊக்கமளித்தனர்.

நான் கபடி விளையாடுவதில் என் அம்மாவிற்கு விருப்பமில்லை. அரை மனசா தான் போட்டிகளுக்கு அனுப்புவார்.தேசிய அளவிலான விளையாட்டில் பங்கேற்க குஜராத் செல்லும்போது, எதிர்பாராத விதமா என் அம்மா உடல் நலம் பாதிக்கப்பட்டார். என் பள்ளி ஆசிரியைகள் தான் என்னை மனதளவில் தேற்றி போட்டிக்கு அனுப்பினர். அதில் நாங்கள் தோல்வியடைந்தோம். அப்ப தான், கபடியில் பெரிய ஆளா வருவாய் என்று ஆசீர்வதித்தார் என் அம்மா. பின், பத்து நாளில் இறந்து விட்டார். அந்த வார்த்தைகள் என்னை இன்னும் மெருகேற்றின.கல்லூரியில் இறுதியாண்டு படிக்கும் போதே கான்ஸ்டபிளா வேலையில் சேர்ந்து விட்டேன். எங்க துறையில் நான் தான் கபடி ஸ்டார்.

இந்த முறை ஆசிய போட்டியில், முதல் முறையாக பெண்கள் கபடி குழுவை இணைத்தனர். இதில் நாம் ஜெயிப்போம்னு முழு நம்பிக்கையுடன் தயாரானோம்.இந்தியாவில் இருந்த கபடி கோச் நிறைய பேர் இப்ப வெளிநாட்டு டீம்களுக்கு கோச் ஆனதால், நம் டெக்னிக் எல்லாம் அந்நாட்டு வீரர்களுக்கு அத்துப்படி. இந்தியன் டீம் விளையாடும் போது அதை வீடியோ எடுத்து, எங்க டெக்னிக்கை தெரிந்து கொண்டு அவர்களும் பின்பற்றுவதால், நாங்க டெக்னிக்கை மாற்றிக் கொண்டோம்.இந்த முறை ஆசிய விளையாட்டு போட்டிகளில் பதக்கப்பட்டியலில் எட்டாவது இடத்தில் இருந்த இந்தியா ஆண்கள் கபடி டீமும், பெண்கள் கபடி டீமும் இணைந்து விளையாடியதில், இந்தியா ஆறாவது இடத்திற்கு வந்தது. பரிசு வாங்கிக் கொண்டு இந்திய கொடியைப் பிடித்துக் கொண்டு, மைதானத்தில் நாங்க ஓடிய அந்த சந்தோஷ தருணம் இன்னும் கண்களிலேயே நிற்கிறது.

http://www.dinamalar.com//splpart_detail.asp?Id=93&dtnew=12/9/௨௦௧௦

எவரெஸ்டில் ஏறி சாதனை படைத்த 16 வயது சிறுவனின் வெற்றி கதை

சிறுவயதில் எவரெஸ்ட்டை தொட்டு, தன் பயணத்தை சுய சரிதையாக எழுதியுள்ள அர்ஜுன் வாஜ்பாய்: நொய்டாவில்,ஒரு சாதாரண நடுத்தர குடும்பத்தில் பிறந்து வளர்ந்தவன் நான். சிறு வயதிலேயே சாகச கதைகளைக் கேட்பதில், படிப்பதில் ஆர்வம் அதிகம். பெரியவனான பின், சாதனைகளைச் செய்ய வேண்டும் என்று நினைத்தேன்.பத்து வயது வரை நானும், மற்ற குழந்தைகளைப் போல், படிப்பிலும், விளையாட்டிலும் ஆர்வமாக இருந்தேன்.ஒரு முறை புத்தகத்தில், மலையேறுவது குறித்து படித்தேன். அதில் ஏற்பட்ட ஆர்வம், என்னை இமயமலையின் எவரெஸ்ட் சிகரத்தை தொட வைத்தது.

யார் வேண்டுமானாலும், எவரெஸ்ட்டிலோ அல்லது வேறு மலைகளிலோ ஏறி விட முடியாது. மலை சிகரத்தின் உயரம், தன்மை, அங்கு உள்ள குளிர், ஆக்சிஜன் அளவு போன்ற பல விஷயங்களை ஆராய்ந்து பார்த்த பின், வயது, உடல் தகுதி ஆகியவற்றை கொண்டு தீர்மானிப்பர். இமயமலை மீது யாரும் தனியாக ஏற முடியாது. பல சிகரங்களில் ஏறியவர்களின் வழிகாட்டுதல், சக மலையேற்ற வீரர்களின் ஒத்துழைப்பு, பொருட்களை மேலே தூக்கிச் செல்வதற்கு உதவி பணியாளர்கள், என, எல்லாம் சேர்ந்தால் தான் சிகரம்.நல்ல குழு இல்லாவிட்டால், தோல்வி நிச்சயம்.

ஆரம்பத்தில், என் பெற்றோர் தடுத்தாலும், என் ஆர்வத்தைப் பார்த்துவிட்டு, என்னை அனுப்பினர். பணத்திற்கு ஸ்பான்சரரும், அரசும் உதவ முன் வரவில்லை. என் உறவினர்களின் சொந்த முயற்சியால், பணத்தை தயார் செய்தோம். பல பிரச்னைகள், சிரமங்களுக்கு பின், ஒரு நல்ல மலையேற்றக் குழுவினருடன் மலையேறினேன்.கடந்த மே மாதம், எவரெஸ்ட் சிகரத்தை வெற்றிகரமாக அடைந்தேன். இதன்பின், மலையேறுவதில் என் ஆர்வம் மேலும் அதிகமானது. ஒவ்வொரு கண்டத்திலும் உள்ள பெரிய சவாலான சிகரங்களையெல்லாம் தொட்டு வர விரும்புகிறேன். வட, தென் துருவங்களுக்குப் பயணம் செய்ய வேண்டும். எனக்கு நல்ல ஸ்பான்சரர் கிடைத்தால், இந்த துறையில் இந்தியாவிற்கு நல்ல பெயர் கிடைக்க பாடுபடுவேன்.

http://www.dinamalar.com/splpart_detail.asp?id=93

இது வெற்றி கதைகளின் தொகுப்பு

என் நண்பர்களே,

நான் ஆங்கிலத்தில் ‘Inspire Minds’