கைகள் இல்லையெனில் உலகம் இருண்டு விடாது!

இரண்டு கைகள், இரண்டு கால்கள், தீர்க்கமான கண்கள் என, மொத்த உறுப்புகளும் நல்ல நிலையில் இயங்கும் திறன் கொண்ட நாம், ஆடும் ஆட்டம் என்ன… பாடும் பாட்டு என்ன… தேடும் வார்த்தை என்ன… ஆனால், இரண்டு கைகளை இழந்து, வாழ்க்கையின் ஓரத்திற்கே சென்று விடும் நிலையில் உள்ளவர்கள், “ஓரமா… அதெல்லாம் எங்களுக்குத் தெரியாது. எங்களுக்குத் தெரிந்ததெல்லாம், எங்கள் கவனத்தைக் கூர்படுத்தி, காலால் அல்லது வாயால், ஓவியம் வரைவது மட்டுமே’ என்கின்றனர் சிலர். இதில், பெண்களும் அடக்கம். கேரளா, போத்தனிக்காட்டில் பிறந்தவர் ஸ்வப்னா அகஸ்டின். கைகள் இல்லாமல் பிறந்தவர். அதை இவர், குறையாகவே கருதவில்லை. எல்லா வேலைகளையும் காலாலேயே செய்யப் பழகிக் கொண்டார். எழுதுவது, ஓவியம் வரைவது என, கற்றுத் தெளிந்தார். பள்ளிப் படிப்பின் போது, பெற்றோர், ஆசிரியர்கள், நண்பிகள் என அனைவரின் உதவியையும் பெற்று, படிப்பை முடித்தார். தன் ஓவியங்களை கண்காட்சிகளில் வைத்தார். லதா மஹிந்த்ரா லங்க்டே என்பவர், விபத்தில் கைகளை இழந்தார். மனம் தளராமல், காலால், வாயால் ஓவியம் வரையக் கற்றுக் கொண்டு, ஓவியக் கலையில் பட்டப் படிப்பும் முடித்தார்.

சுனிதாவுக்கு, தசைகள் வலுவிழந்து போனதால், கை, கால்கள் முற்றிலும் செயலிழந்தன. தன் வாயை மூலதனமாகக் கொண்டு, ஓவியங்களை வரைந்து தள்ளுகிறார். இவர்களைப் போல, இந்தியாவில் இன்னும் சில ஆண், பெண், சிறுவர், சிறுமியர் உள்ளனர். இவர்கள் அனைவரையும் பாசத்துடன் அரவணைத்து, இவர்கள் ஓவியங்களை சந்தைப்படுத்தி, வாழ்க்கையை சுயமரியாதையுடனும் தன்னம்பிக்கையுடனும் நடத்த, மும்பையைச் சேர்ந்த ஓர் அமைப்பு உதவி வருகிறது. ஜெர்மனியின் டார்ம்ஸ்டாட் என்ற இடத்தில், 1912ல் பிறந்த அர்னுல்ப் எரிக் ஸ்டெக்மேன் என்பவருக்கு, இரண்டு வயதில் முதுகெலும்பில் போலியோ நோய் தாக்கியதால், கைகள் செயல்படும் சக்தியை இழந்தார். ஆனால், சிறு வயதிலேயே அவருக்கு ஓவியம் வரைவதில் மிகுந்த விருப்பம் இருந்ததால், அவர் அத்திறமையை வளர்த்துக் கொண்டு, கால்களால் ஓவியங்கள் வரை வதில் புகழ்பெற்றார். தன்னைப் போன்ற பிறவி மற்றும் இடையில் மாற்றுத் திறனாளிகளானவர்களை இணைத்து, ஓர் அமைப்பை உருவாக்க வேண்டும் என ஆவல் கொண்டார்.

கடந்த 1957ல் லிச்டென்ஸ்டீன் நாட்டில், “அசோசியேஷன் ஆப் மவுத் அண்டு பூட் ஆர்ட்டிஸ்ட்ஸ் பெயின்டிங் பீப்பிள்’ (ஏ.எம். எப். பி.ஏ.,) என்ற அமை ப்பை உருவாக்கினார். இன்று அந்த அமைப்பு, 74 நாடுகளில் இயங்கி வருகிறது. இதன் கீழ், 726 மாற்றுத் திறனாளி ஓவியர்கள், தங்கள் திறமையை வெளிப்படுத்தி, கண்ணியமான முறையில் வாழ்ந்து வருகின்றனர். இந்தியாவில், மும்பையில் இந்த அமைப்பு, 2009ல் துவக்கப்பட்டது. இதில் தற்போது, 15 மாற்றுத் திறனாளிகள் தங்கள் ஓவியத் திறமையை வெளிப் படுத்தி வருகின்றனர். இவர்கள், தங்களது வாய் மற்றும் கால் விரல்களில் பிரஷ்களைக் கொண்டு வரையும் ஓவியங்கள், வாழ்த்து அட்டைகள், காலண்டர்கள், பரிசுப் பொருட்கள், புத்தக அடையாள அட்டைகள், “டி-ஷர்ட்’கள், பொருட்கள் வாங்கும் பைகள் ஆகிய பல்வேறு வடிவங்களில் பொறிக்கப்பட்டு விற்கப்படுகின்றன. கலை ரசனையோடு உருவாக்கப்படும் இந்த ஓவியங்கள் பொறிக்கப்பட்ட பொருட்களை வாங்குவதன் மூலம், நமது மாற்றுத் திறனாளி ஓவியர்கள் தங்களது வாழ்க்கையை கவுரவமான முறையில் வாழ, நாமும் உதவி செய்ய முடியும்.

http://www.dinamalar.com/Supplementary_detail.asp?id=6870&ncat=10

டாக்டர் ஆனார் கூலித் தொழிலாளி: கதையல்ல… நிஜம்

கூலித் தொழிலாளியாக இருந்த ஆவடியை சேர்ந்த தேவேந்திரன், இன்று டாக்டராகி, திறமைக்கு வறுமை தடையில்லை என்பதற்கு, வாழும் உதாரணமாக திகழ்கிறார்.

சென்னை ஆவடி, காமராஜர் நகரை சேர்ந்த சிவசங்கர் பார்க் டவுனில், ஒரு பாத்திரக் கடையில் கூலித் தொழிலாளியாக வேலை பார்க்கிறார். இவரின் மூத்த மகன் தேவேந்திரன். விடுமுறை காலத்தில் கூலித் தொழிலாளியாக இருந்து, தன் கடும் உழைப்பால் இன்று டாக்டராகி இருக்கிறார். சினிமாவில் ஒரு பாடல் முடிவதற்குள் கோடீஸ்வரனாகும் காட்சிகள் வரும். ஆனால், தேவேந்திரனின் கதை நீண்ட கால கடும் உழைப்பில் உருவான ஒன்று. அது சினிமாவுக்கு பொருந்தாத கதை. “எங்க வீட்டு சூழ்நிலை எனக்கு நல்லா தெரியும். அப்பா கொண்டு வரும் பணத்துல, குடும்பத்தை நடத்துறதே ரொம்ப கஷ்டம். இதுல நான் என்னோட படிப்புக்காக அப்பாவ தொல்லைப்படுத்த விரும்பல. பத்தாவது வரைக்கும் வீட்டுல படிக்க வச்சாங்க. அதுக்கு மேல படிக்க வைக்க முடியாதுன்னு வீட்டுல சொல்லிட்டாங்க. அதனால பத்தாம் வகுப்பு பொது தேர்வு முடிந்த உடனே, நான் அப்பா கூட வேலைக்கு போக ஆரம்பிச்சுட்டேன்’ என்றார் தேவேந்திரன்.

வேலைக்கு போக ஆரம்பித்தாலும், அவருடைய படிப்பு ஆர்வம் குறையவில்லை, “அதுல வருகிற வருமானத்தை வச்சு பிளஸ் 1 வகுப்பு படிக்கலாம்னு நெனச்சிருந்தேன். ரிசல்ட்டு வந்துச்சு, நான் பள்ளிக்கூடத்தில் முதல் மார்க் வாங்கிருந்தேன். அதனால பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்பு கல்விச் செலவை அந்த பள்ளிக்கூடமே ஏத்துக்குச்சு. ஒரு வழியா என் படிப்பால, எங்க குடும்பத்துக்கு எந்த ஒரு சிரமமும் இல்லாத மாதிரி ஆகிருச்சு. அதனால ஓரளவுக்கு என்னோட தம்பியை நிம்மதியா படிக்க வச்சாங்க’ என்று சொல்கிறார். “நான் பிளஸ் 2 தேர்வில், 1,160 மார்க் வாங்கி, ஸ்கூல்ல முதலிடம் வந்தேன். அதுக்கு பிறகு தான் எனக்கு பிரச்னைகளே ஆரம்பிச்சது’ என, தன் சாதனை பயணத்திற்கு, “பிரேக்’ போட்டார் தேவேந்திரன். பள்ளியில் முதல் மதிப்பெண் வாங்கிய தேவேந்திரனுக்கு, மேற்படிப்பு விண்ணப்பத்திற்குக் கூட, அவர் படித்த பள்ளியின் தலைமை ஆசிரியர் தான் உதவி இருக்கிறார்.

நுழைவுத்தேர்வு இருந்த அந்த காலக்கட்டத்தில், 300 மதிப்பெண்ணுக்கு 297.75 மதிப்பெண்கள் பெற்று, மருத்துவப் படிப்பு படிப்பதற்கு தேர்ச்சி பெற்றிருக்கிறார். ஆனால், கல்லூரி நுழைவுக்கட்டணம் கட்டுவதற்கு கூட, பணமின்றி பல்வேறு தன்னார்வ தொண்டு நிறுவனங்களிடமும், தனி மனிதர்களிடமும், உதவி கேட்டு கிடைக்காததால், எம்.ஜி.ஆர்., அறக்கட்டளையில் கல்விச் செலவிற்காக விண்ணப்பித்திருக்கிறார். செய்தித்தாள்களின் வழியாக, தேவேந்திரனின் நிலைமை அறிந்த எம்.ஜி.ஆர்., அறக்கட்டளை அவருடைய கல்விச் செலவு முழுமையும் ஏற்றுக் கொண்டது. தேவேந்திரனின் கஷ்டத்தை உணர்ந்த பல பேர், அவருக்கு உதவி செய்ய முன் வந்தனர். அந்த உதவிகளை எல்லாம் தன்னை போல, படிப்பிற்காக கஷ்டப்படும் சக நண்பர்களுக்கு பரிந்துரை செய்திருக்கிறார். ஐந்து ஆண்டுகள் கழித்து இன்று, தேவேந்திரன் எம்.பி.பி.எஸ்., மருத்துவ படிப்பில் முதுகலை படிப்பதற்கு, நுழைவுத்தேர்வு எழுத சத்திஸ்கர் சென்று வந்திருக்கிறார். “மேற்படிப்பு படிப்பதற்கு நிறைய செலவாகுமே, எப்படி சமாளிக்க போறீங்க’ என கேட்டால், அவரிடமிருந்து நம்பிக்கையுடன் வந்து விழுகிறது பதில், “மருத்துவ மேல்படிப்பு எல்லாத்துக்கும் அரசு ஊக்கத் தொகை கொடுக்கும். அதனால எனக்கு எந்த கவலையும் இல்ல. என் வாழ்க்கையில நான் அனுபவப்பூர்வமாக உணர்ந்து சொல்றேன். கல்வி தான் என் எல்லா முன்னேற்றத்திற்கும் காரணம். வறுமையை காரணம் காட்டி யாரும் படிப்ப பாதியில நிறுத்திடாதீங்க. உங்கக்கிட்ட இருக்கிற வறுமையை விரட்டனும்னா கல்வியால தான் அது முடியும்!’

- அ.ப.இராசா

http://www.dinamalar.com/News_Detail.asp?Id=251067

வயது 90 ஆனால் என்ன? 4ம் வகுப்பு தேர்வு எழுதி அசத்திய மூதாட்டி

படிக்க வசதியிருந்தும், நல்ல உடல் ஆரோக்கியம் இருந்தும் கல்வி கற்காமல் இருக்கும் பல பேருக்கு இடையே வயது 90ஐ எட்டியும், உடல் தளர்ந்தும் கூட, மனம் தளராமல் நான்காம் வகுப்பு தேர்வு எழுதிய மூதாட்டியை பலரும் பாராட்டி வருகின்றனர். கேரளாவில் ஒரு மூதாட்டி நான்காம் வகுப்பு தேர்வு எழுதி பலரது பாராட்டை பெற்று அசத்தி உள்ளார்.

கேரளாவில் தற்போது கல்வி கற்க வயது தடையாக இல்லை என்பதும், எவ்வளவு வயது முதிர்ந்திருந்தாலும் அவர்கள் நான்காவது, ஏழாவது, 10ம் வகுப்பு தேர்வு எழுத முடியும் என்ற நிலை உள்ளது மட்டுமல்ல, குறைந்தபட்சம் நான்காம் வகுப்பு தேறியிருந்தால் மட்டுமே பல்வேறு அரசு சலுகைகளை பெற முடியும் என்ற நிபந்தனை உள்ளதால், பல வயது முதிர்ந்த பெரியவர்களும் கல்வி கற்பதில் ஆர்வம் காட்டி வருகின்றனர். கேரள மாநிலம் ஆலப்புழாவைச் சேர்ந்தவர் பாத்திமா பீவி (90). இவர் சிறுவயதில் குடும்ப சூழ்நிலை காரணமாக பள்ளிக்கூடம் சென்று கல்வி கற்க முடியாத நிலை ஏற்பட்டது. ஆனால், தற்போது வயது அதிகரித்தும், உடல் தளர்ந்து விட்ட நிலையிலும் கல்வி கற்க வேண்டும் என்ற ஆர்வம் ஏற்பட்டது. குறைந்தது 10ம் வகுப்பாவது தேர்ச்சி பெற வேண்டும் என விரும்பினார். இதை அடுத்து அவர் தேர்வெழுத விண்ணப்பித்தார். தொடர்ந்து அவர் நேற்று முன்தினம் காலை ஆலப்புழா வாடக்கனால் சலாமத்துல் திக்வான் மதரெசா பள்ளி வளாகத்தில் அமைக்கப்பட்ட தேர்வு அரங்கில் தேர்வெழுதினார். கண் பார்வை மங்கியிருந்ததால், வினாத்தாளை படித்து பார்க்க இயலாமல் அவதிப்பட்டார். கண்களை குறுக்கியும், உற்று நோக்கியும் கூட பல வாக்கியங்கள் அவருக்கு தென்படவில்லை. அதை கவனித்து விட்ட அறை கண்காணிப்பாளர் விரைந்து சென்று அவருக்கு வினாக்களை படித்துக் காண்பித்து தேர்வெழுத உதவினார்.

தேர்வெழுதி விட்டு வெளியே வந்த அவர், மிகவும் சிறப்பாக தேர்வெழுதி இருப்பதாகவும், இதில் தேர்ச்சி பெற்ற பின் ஏழாம் வகுப்பு தேர்வெழுத விருப்பதாகவும், 10ம் வகுப்பில் தேர்ச்சி பெறவேண்டும் என்பதே தனது விருப்பம் என்றும் தெரிவித்தார். தேர்வெழுத அவர் தனது மகனுடன் தேர்வரங்கிற்கு வந்திருந்தார். அத்தேர்வை மாவட்டத்தில் அமைக்கப்பட்ட 142 மையங்களில், ஆயிரத்திற்கும் மேற்பட்ட தனித்தேர்வர்கள் ஆர்வத்துடன் தேர்வெழுதினர். அவர்களில் பலரும் 70, 80 வயதை கடந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

http://www.dinamalar.com/News_Detail.asp?Id=233393

இடது கையை இழந்த ஜூடோ வெற்றி வீரன் நிகிடோ!

ஜப்பானில், டொக்கியோவில் வசித்து வந்து பத்து வயது சிறுவன் நிகிடோ, கார் விபத்து ஒன்றில் தனது இடது கையை இழந்தவன். ஆனால் அவனுக்கு ஜூடோவில் மிகுந்த ஆர்வம் இருந்ததால், ஒரு மாஸ்டரை அணுகி ஜூடோ கற்றுக் கொள்வதற்கான தனது விருப்பத்தைத் தெரிவித்தான். அவரும், அவனைத் தனது சீடனாக ஏற்றுக் கொண்டு, ஜூடோ கற்றுக் கொடுக்கத் தொடங்கினார். ஆனால், மூன்று மாதங்களாகியும் அவர் ஜூடோவில் ஒரே ஒரு அசைவை மட்டுமே அவனுக்க கற்அக் கொடுத்திருந்தார்.

ஒரு நாள் நிகிடோ, தைரியத்தை வரவழைத்துக் கொண்டு அவரிடம் மெதுவாக “மாஸ்டர், இந்த அசைவைத் தவிர நீங்கள் வேறு அசைவுகளை ஏன் எனக்குக் கற்று தரவில்லை.’ “நீ இந்த ஒரு அசைவை மட்டும் தினமும் பயிற்சி செய்து வா, போதும். வேறு எதுவும் கற்றுக் கொள்ள வேண்டிய அவசியமில்லை’ என்று ஆசிரியர் பதிலளித்தார்.

ஒன்றும் புரியாத சிறுவன் நிகிடோ, ஆசிரியரிடம் நம்பிக்கை வைத்து, அந்த ஒரு அசைவை மட்டுமே தினமும் தீவிரமாக பயிற்சி செய்து வந்தான். கிட்டத்தட்ட ஒரு ஆண்டுக்கு பின், மாஸ்டர் அவனது முதல் பந்தயத் தொடருக்கு நிகிடோவை அழைத்துச் சென்றார். வியப்பூட்டும் விதமாக, முதல் இரண்டு போட்டிகளிலும் நிகிடோ மிக எளிதாக வெற்றி பெற்றான். மூன்றாவது போட்டி சற்றே கடினமாக இருந்தது. சிறிது நேரத்திற்கு பிறகு நிகோடோவின் ஒரே மாதிரியான ஜூடோ அசைவால் பொறுமையிழந்த எதிர்தரப்பு வீரர், அவனை ஆக்ரோஷமாகத் தாக்கத் தொடங்கினார். ஆனால் நிகிடோவோ, தனக்குத் தெரிந்த அந்த ஒரே ஒரு அசைவை மட்டுமே உபயோகித்து அவரை எளிதாகத் தோற்கடித்தான். தனது வெற்றியை நம்ப இயலாத நிகிடோ, இறுதிப் போட்டிக்குத் தயரானான்.

இம்முறை அவருடன் ஜூடோ சண்டை போட இருந்தவர், உருவத்தில் பெரிவராகவும், வலிமையானவராகவும், அதிக அனுபவமுள்ளவராகவும் தோன்றினார். சிறிது நேர சண்டைக்குப் பின், நிகிடோ சோர்வுற்றதை கவனித்த நடுவர், அவனுக்கு அடிபட்டு விடப் போகிறதே என்ற கவலையில், சிறிது நேரம் ஆட்டத்தை நிறுத்த முடிவு செய்தார்.

“வேண்டாம், அவன் தொடர்ந்த சண்டை போடட்டும்; ஒன்றும் ஆகாது’ என்று நிகிடோவின் மாஸ்டர் உறுதியாகக் கூறினார். போட்டி மீண்டும் துவங்கியபோதுதான் அந்தச் சம்பவம் நிகழ்ந்தது. நிகிடோவுக்கு எதிராக விளையாடியவர், கையில்லாத சிறுவன்தானே, என்ன பெரிதாக செய்து விடப் போகிறான் என்று சற்றே அலட்சியமாகிவிட, நிகிடோ அத்தருணத்தை தனக்கு சாதகமாக்கிக் கொண்டு, தனக்குத் தெரிந்த அந்த ஒரே அசைவால் அவரைத் தாக்கி நிலைகுலையச் செய்தான். பிறகென்ன, நிகிடோ அப்போட்டியை மட்டுமல்லாமல், அத்தொடரையே கைப்பற்றி, வெற்றிவீரனானான்.

வீடு திரும்பும் வழியில், இறுதிப் போட்டி வரை அவனுக்கு எதிராக விளையாடியவர்களின் பல்வேறு அசைவுகளைப் பற்றி நிகிடோவின் மாஸ்டர், அவனுக்கு விளக்கிக் கொண்டே வந்தார். மீண்டும் தைரியத்தை வரவழைத்துக் கொண்ட நிகிடோ, அவரிடம் கேட்டான்: “மாஸ்டர் ஒரே ஓர் அசைவை மட்டுமே வைத்துக் கொண்டு என்னால் எதிராளியை எப்படி எளிதில் வீழ்த்த முடிந்தது?’

“உனது வெற்றிக்கு இரண்டு காரணங்கள் உள்ளன. ஒன்று, ஜூடோவின் மிகக் கடினமான அசைவை மீண்டும் மீண்டும் பயிற்சி செய்து, நீ அதில் மிகவும் தேர்ந்து விட்டாய். இரண்டாவதாக உனது அசைவை எதிர்கொள்ள, உனது கையைப் பிடித்துத் தடுப்பதுதானா ஜூடோவிலே உள்ள ஒரே ஒரு பாதுகாப்பு இயக்கம். உனக்கு இடது கை இல்லாததால், எதிராளிகளுக்கு அதை செய்ய முடியாமல் போனது. எனவே உனது பலவீனத்தால் தான் உன்னால் எளிதாக வெற்றி பெற முடிந்தது’ அதாவது நிகிடோவின் மிகப்பெரும் பலவீனம் அவனுக்கு மிகப்பெரும் பலமாக மாறி, அவனை வெற்றி பெறச் செய்தது.

சில நேரங்களில் நம்மிடம் சில பலவீனங்கள் உள்ளதாக நினைத்துக் கொண்டு, சூழ்நிலைகளையும், பிறரையும், அதிஷ்டத்தையும், ஏன், நம்மையுமே கூட குறை கூறிக் கொள்கிறோம்; ஆனால் ஒரு நாள் நமது பலவீனமே நமக்கு பலமாக மாறக்கூடும் என்பதை நாம் அறிந்திருப்பதில்லை.

நாம் ஒவ்வொருவருமே விசேஷமானவர்கள் மற்றும் முக்கியமானவர்கள்தான். எனவே, நமக்கு பலவீனங்கள் இருப்பதாக நினைக்காமல், நம்மை நாமே தாழ்வானவர்களாகவோ, உயர்ந்தவர்களாகவோ நினைத்தக் கொள்ளாமல், நமக்கு இறைவன் தந்த வாழ்க்கை என்ற வரத்தை முழுவதுமாக உபயோகித்து, அதில் நம்மால் முடிந்த அளவு வெற்றி பெற முயற்சிப்போமாக!

-ஆர். ஸ்ரீமதி நவிச்சந்தர், தில்லி

http://www.dinamalar.com/Supplementary_detail.asp?id=4745&ncat=16

எட்டாம் வகுப்பு தேர்வை எழுதிய 60 வயது பெண்

தாராபுரத்தை சேர்ந்த 60 வயது ரத்னாம்பாள், எட்டாம் வகுப்பு தனித்தேர்வை ஆர்வமுடன் எழுதி வருகிறார். இவரது ஆர்வத்தை ஆசிரியர்கள் பலரும் பாராட்டினர்.

எட்டாம் வகுப்பு தனித்தேர்வு, கடந்த 7ம் தேதி முதல் நடந்து வருகிறது; இன்று அறிவியல் பாடத்தேர்வு நடக்கிறது. திருப்பூர் ஜெய்வாபாய் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் தேர்வு மையம் அமைக்கப்பட்டுள்ளது. நேற்று சமூக அறிவியல் பாடத்தேர்வை 216 பேர் எழுதினர். இத்தேர்வை, தாராபுரம், என்.ஜி.ஜி.ஓ., காலனியை சேர்ந்த ரத்னாம்பாள் எழுதினார். இவருக்கு வயது 60.

அவர் கூறுகையில்,”"45 ஆண்டுக்கு முன் ஐந்தாம் வகுப்பு வரை பயின்றேன். தொடர்ந்து கல்விபயிலும் வாய்ப்பு கிடைக்கவில்லை. வாழ்க்கையில் பல கசப்பான அனுபவங்களுக்கு பிறகு, தற்போது தனியாக வசித்து வருகிறேன். பலர் கல்வி பயில உதவி செய்து வருகிறேன். “”கடந்த 20 ஆண்டுகளாக யோகா, தியானம் செய்து வருகிறேன். பள்ளி மாணவர்கள் உட்பட மற்றவர்களுக்கும் யோகா கற்றுக்கொடுக்கிறேன். என் தகுதியை உயர்த்திக் கொள்ள வேண்டும் என்பதற்காக இப்போது தேர்வு எழுதும் பணியில் ஈடுபட்டுள்ளேன். தியானம் செய்வதால், மனப்பாடம் செய்ய சுலபமாக இருக்கிறது. படித்ததும் மனப்பாடம் செய்யவும், மறக்காமல் நினைவில் வைத்துக் கொள்ளவும் முடிகிறது. அடுத்து பத்தாம் வகுப்பு தனித்தேர்வு எழுதி வெற்றி பெறுவேன்,” என்றார்.

வாய் பேச இயலாத, காது கேளாத மற்றும் மனநலம் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளி கலா(18) என்பவரும் எட்டாம் வகுப்பு தேர்வு எழுதி வருகிறார். இதுகுறித்து அவரது தாய் இந்திரா கூறுகையில்,”"தம்பி மகளான கலாவை தத்தெடுத்து வளர்த்து வருகிறேன். பிறப்பிலேயே பாதிப்பு இருந்தது. ஐந்தாம் வகுப்பு வரை சாதாரண பள்ளியில் பயின்று வந்தாள். அதன் பின், தற்போது வீட்டில் வைத்து கற்றல் பயிற்சியை அளித்து வருகிறேன். பிற மாணவர்களை போல் நன்றாக படிக்கிறாள். தொடர்ந்து ஊக்கம் அளித்து, இவளது குறைகளை கடந்து சாதிக்க வைப்பேன்,” என்றார். பெற்றோரின் வற்புறுத்தலுக்காக மட்டுமே பள்ளிக்கு செல்லும் மாணவர்கள், வாய்ப்பு இருந்தும் தவறாக பயன்படுத்தும் மாணவர்கள் மத்தியில், படிப்பின் மீது இவர்கள் கொண்டுள்ள மோகத்தை, தேர்வு எழுத வரும் சக மாணவர்கள், ஆசிரியர்கள் பாராட்டினர்.

http://www.dinamalar.com/News_Detail.asp?Id=143295

படித்தேன்… சாதித்தேன் – முன்னாள் தலைமைத் தேர்தல் கமிஷனர் கிருஷ்ணமூர்த்தி

முன்னாள் தலைமைத் தேர்தல் கமிஷனர் கிருஷ்ணமூர்த்தி: என் அப்பாவின் பணி நிமித்தம் காரணமாக, பல ஊர்களிலும் படிக்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. எட்டாம் வகுப்பை திருச்சியிலும், ஒன்பதாம் வகுப்பை குஜராத் பரோடாவிலும் படித்தேன். பெங்களூரு ஜோசப் பள்ளியில் பிளஸ் டூ முடித்தேன். அதே ஊரில் ஜோசப் கல்லூரியில், பி.ஏ., சேர்ந்தது என் வாழ்வில் திருப்பு முனையாக இருந்தது.பொருளாதார சிரமங்களுக்கிடையே நான் படித்துக் கொண்டிருந்த போது, ஐ.ஏ.எஸ்., ஆக லட்சியமாக இருந்தேன்.

ஒரு புறம் கல்வி தேர்வுக்கு தயாராக இருந்தாலும், மறுபுறம் இந்திய ஆட்சிப் பணிக்கு தேர்வாகி கொண்டு இருந்தேன். கஷ்டப்பட்டு கல்வி கட்டணம் கட்டினாலும் விடுதிக் கட்டணம் கட்டுவதற்கு சிரமமாக இருந்தது. என் பேராசிரியர் ஆசிர்வாதம் என்னை ஊக்கப்படுத்தி, உதவினார்.கல்லூரி நிர்வாகம் எனக்கு அதிகம் உதவியது. இரவு 12 மணி நேரம் வரை படித்து, பின் காலை ஆறு மணிக்கு எழுந்து படிப்பேன். தேர்வுக் காலம் நெருங்கி கொண்டிருந்தது. நான் பொருளாதாரம், வரலாறு, அரசியல், அறிவியல் போன்ற தேர்வுகளில் ஆய்வுக் கட்டுரை எழுதுவது போல் தேர்வு எழுதினேன். மூன்று தேர்வுகளிலும் மைசூர் பல்கலையிலேயே முதல் மாணவனாக தேர்ச்சி பெற்றேன்.கல்லூரியில் முதல் மாணவனாக வந்ததால் 100 ரூபாய் பரிசு தொகையை ராஜாஜியின் கையால் பெற்றேன்.

பி.ஏ., முடித்தவுடன் ஐ.ஏ.எஸ்., தேர்வு எழுதினேன். ஆனால், இரண்டு மதிப்பெண்களில் தவறிப் போய் ஐ.ஆர்.எஸ்., கிடைத்தது. இந்தியாவில் உள்ள பல மாநிலங்களில் பணியாற்றிய பிறகு என் நேர்மைக்கும், உண்மைக்கும் பரிசாக 2000 ஆம் ஆண்டு இந்தியத் தலைமை தேர்தல் அதிகாரியாக நியமித்தனர்.கடந்த 2004 ஆம் ஆண்டு இந்திய லோக்சபா தேர்தலை சிறப்பாக நடத்தினேன். இப்போதும் மதிய நேரங்களில் தூங்கச் செல்லாமல் படித்துக் கொண்டிருக்கிறேன். படிப்பு தான் என் வாழ்வின் ஆதார சுருதி.

http://www.dinamalar.com//splpart_detail.asp?Id=93&dtnew=12/1/2010

ஏழ்மை எனக்கு தடை அல்ல – கால்பந்தாட்ட வீராங்கனை வரலட்சுமி

என் சொந்த ஊர் புதுச்சேரியில் உள்ள திருக்கனூர். நான் புதுச்சேரி கதிர்காமம், அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 1 படிக்கிறேன். பள்ளிக்காக தினமும் 50 கிலோ மீட்டர் பயண நேரம் தவிர மற்ற நேரங்களில் கால்பந்தாட்ட பயிற்சி தான் பொழுது போக்கு. பள்ளியின் உடற்பயிற்சி ஆசிரியர் செந்தில் சார், கால்பந்தாட்ட வீரர் என்பதால், எனக்கு ஊக்கமளித்து, கால்பந்து விளையாடச் செய்தார். பள்ளியில் மைதானம் இல்லாததால், கிராமத்தில் காலியாக உள்ள இடங்களில் பயிற்சி செய்வோம். விடுமுறைகளில், பக்கத்து ஊர் பள்ளி மைதானத்தைப் பயன்படுத்துவோம்.

கால்பந்து விளையாடத் தேவையான ஷூ மற்றும் பிரத்யேக உடைகளை ஆசிரியரே தன் சொந்த செலவில் வாங்கிக் கொடுத்தார். அவர் கொடுத்த பயிற்சி தான் என்னை தேசிய போட்டிகளில் பங்கேற்கச் செய்தது. போட்டிகளில் பங்கேற்க, முதலில் ஒரிசா சென்ற போது தான், முதன் முதலில் ரயிலை பார்த்தேன். போட்டிக்காக ஒரிசாவிலிருந்து, உத்ராஞ்சல் சென்றேன். அதன் பின், 2008ல் வியட்நாமில் நடந்த பெண்கள் திருவிழாவிற்கான கால்பந்தாட்டத்தில் இந்தியா இரண்டாம் இடம் பிடித்தது. என் முதல் போட்டித் தொடரில் பெற்ற அந்த வெற்றி தான், என் வாழ்வில் மறக்க முடியாத நிகழ்வு.

என் பெற்றோர் படிக்கவில்லை என்றாலும், என் அண்ணன் மகேஷ் தான் எனக்கு முழு ஒத்துழைப்பு தருகிறார். நான் கால்பந்து மட்மல்ல, கோ-கோ, கைப்பந்து, கபடி என பல விளையாட்டுகளில் பதக்கங்கள் குவித்துள்ளேன். இந்திய அணிக்கு உலகக் கோப்பை போட்டியில் பதக்கம் வாங்கித் தர வேண்டும் என்பது தான் என் லட்சியம். அதே உத்வேகத்துடன் தான் தினமும் பயிற்சி செய்து கொண்டிருக்கிறேன்.

http://www.dinamalar.com//splpart_detail.asp?Id=93&dtnew=11/30/2010

Previous Older Entries

Follow

Get every new post delivered to your Inbox.